Monday, December 31, 2007

ஆஹா வந்திருச்சு! ஞாபகம் வந்திருச்சு

அதிகாலையில் கண் விழித்ததுமே மனசுல பல கேள்விகள் எழுந்தன.
இன்னிக்கு என்ன தேதி? ஆ.... 31 டிசம்பர் 2007.
என்னடா இது, இப்பதான், 2007 மலர்ந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள மலர் உதிரும் நேரமாயிடுச்சா? அடடா அவ்வளவு சீக்கிரம் நாட்கள் உருண்டோடிப் போயிடுச்சா?
சே சே ரொம்ப மோசமடா இந்த பூமிப்பந்து. இது தானும் உருண்டு, நம்மளையும்
இப்படிப் புரட்டி எடுக்குதே. ஹும்.....

சரி, இந்த காலத்து டிவி சேனலைப் போல, 2007ல் நாம என்ன சாதிச்சோம்னு பார்ப்போம். முதல்ல, வருட ஆரம்பத்தில் என்ன சூளுரை அதாங்க, எல்லாரும் மனசுக்குள்ள சொல்லிப்பாங்களே அதுதான். புரியலையா, சரி தெளிவா சொல்லட்டுமா
இது செய்ய மாட்டேன். அது செய்ய மாட்டேன் என்பது போல சபதங்கள்தான்.

ரொம்ப போரடிக்காம விஷயத்துக்கு வரேன். 2007ன் ஆரம்ப தினத்தன்று
என்ன சபதம் மனதுக்குள் செய்து கொண்டோம்? அதைக் கடைப்பிடித்தோமா என்று
எனது மன டைரியைப் புரட்டிப் பார்த்ததன் விளைவு இப்படி முளைத்தது.

ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும், இறுதியிலும் இந்த சுய ஆராய்ச்சி நடைபெறும்.
அந்த தருணம்தான் இது.

ஆமா, அது என்ன சபதம் எடுத்தோம்? பொய் பேசக்கூடாது என்றா? இல்லயே
அது நான்கு வருடங்களுக்கு முன்னராயிற்றே (பொய் இல்லங்க, நிஜம்தான்)
அப்பறம், புறம் பேசக்கூடாதுன்னா? இல்ல இல்ல, அதுவும் முடிஞ்சிருச்சே.
எப்பவும் இனிமையா எல்லோரிடமும் பேசணும்ட்டா? அதுவும் எடுத்தாச்சே.
இப்படியாக பல கேள்விகளும், அதற்குண்டான பதில்களுமே மாறி மாறி மனசுக்குள்
ஓட, ஓருவழியாக வந்தது, தலைவலிதான். அனாலும், இரண்டுமே விட்ட பாடில்லை.
அது என்ன இரண்டு? அதாங்க தலைவலியும், கேள்விகளும்.

இதற்கிடையில், இடைஞ்சல்கள் வேறு. முழுவதுமாக யோசிக்க விடாமல், அவ்வப்போது ஒலிக்கும் அழைப்பு மணிகள் காலிங் பெல்லும், டெலிபோன் பெல்லும்தான். ஒயாது ஒலித்து மேல்கொண்டு, மனக்குதிரையைப் பின்னால் ஓட விடாமல், இழுத்துப் பிடிக்கும் கடிவாளங்களாக செயல்படுகின்றனவே.

எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல், விடையும் கிடைக்காமல், என்ன இது,
திரிசங்கு சொர்க்கம் போல தவிப்பாக இருக்கிறதே. அப்படி இந்த வருட ஆரம்பத்தில்
என்னதான் சபதம் செய்தோம்?

வீட்டில், என்னுடைய இந்த தவிப்பைப் பார்த்த அங்கத்தினர் அவர்கள் பங்கிற்கு
நிறைய யோசனைகளை (எல்லாம் ரொம்பவே புதியதாக இருந்ததால், அதனை இனி வரும் வருடங்களுக்கு உதவும் என்ற காரணத்தினால், தணிக்கை செய்து விட்டேன்)
அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர். போற போக்கப்பார்த்தால், ஒரு தலைப்புச் செய்தியாக மாறி விடுமோன்னும் பயம் வந்தது. ஆனால், நான் செய்த அந்த ‘சபதம்’ மட்டும் நினைவுக்கு வராமல் படுத்தியது.

டிசம்பர் 31 கரைந்து கொண்டிருந்ததே தவிர, எதிலும் லயிப்பு இல்லாமல் மனது
தவித்தது. ஆனால், இது புரியாமல், எனது கணவரும், குழந்தைகளும் சந்தோஷமாக
ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தனர்.

என் தவிப்பு புரியாத என் மகள், அப்பா, அம்மாவையும் இந்த விளையாட்டில சேர்த்துக் கொள்ளலாமான்னு, ஓடி வந்து, என்னைக் கைப்பிடித்து இழுத்தாள்.
எதிர்பாராது இழுத்ததாலும், நாள் முழுவதும் யோசித்தும் விடை கிடைக்காத தவிப்பினாலும், மகள் மீது எரிச்சல் மிகுதியால், கோபம் கொண்டு சத்தம் போட,
மகளோ,
‘அம்மா நான் கண்டு பிடிச்சுட்டேன். உன் 2007ன் சபதம் என்னன்னு கண்டு
பிடிச்சுட்டேன்’ னு கைக்கொட்டி குதிக்க ஆரம்பித்து விட்டாள்.
‘அம்மா 2007ன் ஆரம்ப சபதம் கோபம் கொள்ளக்கூடாது என்பதுதானே’

அவளின் அந்த செய்கை சுரீர் என்று மனதில் உறைக்கவே, எனக்கு நானே
வெட்கிக் கொண்டேன்.

ஆனால், கணவரோ, ‘என்ன பானு, ஜனவரி 1, 2008 வரப்போறதே
இந்த வருடத்திய உன் சபதம் என்ன என்பதை, சத்தமாக இப்பவே எல்லோர்
முன்னாலும் சொல்லு. அப்பதான், வருடக்கடைசியில், தவிப்பில்லாமல்
சந்தோஷமாக இருக்கலாம்’ என்று கூற, அவருக்கு ஆமாம் போட்டனர்
குழந்தைகளும்.

நானோ, சளைக்காமல், சொன்னது

‘ஆஹா வந்திருச்சு, ஞாபகம் வந்திருச்சு,
2008ம் வந்திருச்சு, ஆனா சபதம் எடுக்காதேன்னு ஞானமும் வந்திருச்சு’

அனைவருக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கள்.