Tuesday, November 6, 2007

ஏற்றுமதி-இறக்குமதி --- அந்நியச் செலாவணியின் பங்கு

அந்நியச் செலாவணி என்றால் என்ன?

இந்தியாவில், நாம் செலவு செய்யும் போது, வெகு சுலபமாக நமது இந்திய ரூபாயில் மதிப்பிட்டு, கணக்கிடுகிறோம். இதே மாதிரி அயல் நாடுகளிடையே வணிகப்பரிமாற்றத்தின் போது ஏற்படும்

நாணய மதிப்பீடே ‘அந்நியச் செலாவணி’ என அழைக்கப் படுகிறது. இந்த அந்நியச் செலாவணியின் மதிப்பீடு ஓவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும். இது நிலையாக இருப்பதில்லை. அன்றாட உலக வர்த்தகத்திற்குத் தகுந்தாற் போல மதிப்பு ஏறும். அல்லது இறங்கும்.

சாதாரணமாக, தனி ஒரு நபரினை இது பாதிப்பது இல்லை. ஆனால், ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப் பட்ட வணிக நிறுவனமாக இருப்பின், நமது ரூபாயின் மதிப்பு மாறுபடுமானால், மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

சில சமயங்களில், நன்றாக நடந்து கொண்டிருந்த வர்த்தகம் நலிவடைந்த நிறுவனமாக மாற நேரிடும்.

ஏற்றுமதி அல்லது இறக்குமதி போன்ற வியாபாரங்கள் பெரும்பாலும், அறிமுகமில்லாத நிறுவனங்களுக்கிடையே நடைபெறுவதில்லை. ஏதாவது ஒரு வகையில் உத்திரவாத அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. இவற்றில் முக்கிய பங்குவகிப்பவர்கள்:

இடைத் தரகர்கள்

சகோதர நிறுவனங்கள் (அவர்களுக்குள் ஏற்கெனவே பரிச்சயமாகி இருந்தால்)

வங்கிகள்

மேற்கண்டபடி வியாபார ஒப்பந்தத்தில் சரக்குகளின் அளவு, தரம், விலை, மற்றும் காலவரம்பு முதலியன தீர்மானிக்கப்பட்டு வரையறுக்கப்படுகின்றது.

சரக்குகள் தயாரான பிறகு, தேவையான அடிப்படை டாகுமென்டுகள் என்னென்ன?
Bill of Exchange எனப்படுகிற உண்டியல் (இது ஒண்ணும் கோயில்களில் காணிக்கை போடுகிற உண்டியல் இல்லீங்க) இதில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள், சரக்குகளுக்கான மதிப்புத் தொகையை கொடுபட வேண்டியதற்கான ஓலை.

Invoice -இதில் அனுப்பும் சரக்கின் அளவு, விலை, தரம், எடை போன்ற தகவல்கள் குறிக்கப் பட்டு,மொத்த சரக்கின் மதிப்பும் கணக்கிட்டு காட்டப் பட்டிருக்கும்.

Certificate of Origin.

Bill of Lading or AirwayBill -அதாவது சரக்கினை கப்பலிலோ அல்லது விமானத்திலோ ஏற்றி அனுப்பியதற்கான அத்தாட்சிச் சான்றிதழ்.

சரக்குகளின் மதிப்புக்குத் தக்கான காப்பீடு சான்றிதழ்

இந்த நிறுவனங்கள் தமது அயல் நாட்டு வர்த்தகங்களை முழுக்க முழுக்க வங்கிகளையே நம்பி ஈடுபடுகிறார்கள். சரக்குகளை ஏற்றுமதி செய்தாலும், அவற்றை வங்கிகளின் ஒப்புதல் இருந்தால்தான், வெளியே எடுத்து வர இயலும். இதற்குத்தான் மேலே சொன்ன டாகுமென்டுகள் உதவுகின்றன.

ஏற்றுமதிகள் இரு வகைகளில் நடைபெறுகிறது. முதலாவது நம்பிக்கையின் பேரில், இரு நிறுவனமும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி சரக்குகளை அனுப்புதல்.

அடுத்தது, Letter of credit அடிப்படையில் அனுப்புவது.

இருவகைகளிலும், சரக்குகளை ஏற்றுமதி செய்த பிறகு, தயாராக இருக்கும் டாகுமென்ட்களை வங்கிகள் மூலமாக அனுப்புவதுதான் சிறந்தது. இதுதான் நடைமுறையிலும் இருக்கிறது. அப்போதுதான், 100% பணத்தினை வரவு செய்ய முடியும்.

முதலாவது வழியில் (அதாவது ஒப்பந்தத்தின் படி) ஏற்றுமதி செய்தால், டாகுமென்டுகளை வங்கி கணக்கில் எடுத்த நாளிலிருந்து 30 நாட்களில் பணம் வந்து விடும்.

Letter of credit ன் அடிப்படையில் ஏற்றுமதி செய்தால், டாகுமென்டுகள் சரியாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக, பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். ஆனால் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு அன்றைய நிலவரப்படி பணமாற்று நிர்ணயிக்கப்படும். இது உலக சந்தையில் நமது ரூபாயின் மதிப்பைப் பொறுத்து அமையும்.

ஏற்றுமதியாளர்களின் பெருங்கவலை, இந்த அந்நியசெலாவணி பணமாற்றம் தான். அது அவர்களுக்கு அனுகூலமாக அமைந்தால் மகிழ்ச்சிதான். (நான் பல ஏற்றுமதியாளர்களின் மலர்ந்த முகங்களை எனது பணியின் போது பார்த்திருக்கிறேன்).

அன்றாட மதிப்பு வேறுபாடு, அந்நிய செலாவணியில் தவிர்க்க முடியாத ஒன்று. இதிலிருந்து மீளும் முகமாகத்தான், “Forward Contract” என்று சொல்லப்படுகின்ற வருங்கால மதிப்பு மாறுபாட்டுக்கான காப்பு வசதியினையும் வங்கிகள் ஏற்படுத்தித் தருகின்றன. இது அந்நிய செலாவணி மதிப்பு மாறுபாட்டால் ஏற்படுத்தும் எதிர்பாராத இழப்பிலிருந்து ஏற்றுமதி/இறக்குமதியாளர்களைக் காக்கின்றது.

அந்நிய செலாவணி நிலவரம் சாதகமாவது போல இருந்தால், அந்த சமயத்திற்குத் தக்கபடி, தம்முடைய செயல்பாட்டினை மாற்றிக்கொள்ளும் நிர்வாகத்திறமையும் அவசியமாகும்.

7 comments:

நாமக்கல் சிபி said...

ஏற்றுமதித் துறையில் புழங்கும் சொற்களை எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள்!

அதே போல அவற்றைக் கையாளும் வழிமுறைகள் அதாவது ஃபார்மாலிட்டீஸ் போன்றவை பற்றியும் சொல்வீர்கள் என்றால் நன்றாக இருக்கும்!

மேலும் அண்டர் டேக்கிங் (ஒரு சில எக்ஸ்போர்ட் இன்வாய்ஸ்களில்) என்று குறிப்பிடுகிறார்கள். அதுபற்றியும் கொஞ்சம் விளக்குங்களேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

நல்வரவு!

வினையூக்கி said...

வாங்க வாங்க ...வங்கித்துறையில் இருந்து மேலும் ஒருவர். துறைசார்ந்த பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்.
அப்புறம் இந்த வேர்டு வெரிபிகேசனை எடுத்துடுங்க

Unknown said...

தங்கள் வரவு நல்வரவாகுக. நம்ம வினையூக்கி சொன்ன மாதிரி வேர்டு வெரிபிகேசனை எடுத்துடுங்க.

மங்களூர் சிவா said...

இந்த இசிஜிசி பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க மேடம்.

ஏற்றுமதிக்கும் இந்த சேம்பர் ஆப் காமர்சுக்கும் என்ன சம்பந்தம் எதுக்காக அவங்ககிட்ட இருந்து லெட்டர் வாங்க வேண்டியிருக்கு அதுவும் கொஞ்சம் சொல்லுங்க.

நன்றி

பாலராஜன்கீதா said...

// Letter of credit ன் அடிப்படையில் ஏற்றுமதி செய்தால், டாகுமென்டுகள் சரியாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக, பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.//

இதில் வங்கிக்கு அயல்நாட்டிலிருந்து அன்னியச் செலாவணி வர சில நாள்கள் / மாதங்கள் ஆகுமே. வங்கி தனக்கு பணம் வரும்முன் வாடிக்கையாளருக்கு பணம் அளிப்பதை எவ்விதம் கையாளுகின்றது ? (அதாவது இதன் மூலம் வங்கிக்கு எவ்விதத்தில் இலாபம் ?) இதற்கும் வங்கி தன் வாடிக்கையாளருக்கு அளிக்கும் Foreign Bills Negotiation Limits கடன் வசதிக்கும் உள்ள தொடர்பையும் சற்று விளக்கினால் நலம்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== ஏற்றுமதியாளர்களின் பெருங்கவலை, இந்த அந்நியசெலாவணி பணமாற்றம் தான். அது அவர்களுக்கு அனுகூலமாக அமைந்தால் மகிழ்ச்சிதான். (நான் பல ஏற்றுமதியாளர்களின் மலர்ந்த முகங்களை எனது பணியின் போது பார்த்திருக்கிறேன்). ==>
இப்போதுள்ள ( Forward contract ஏதும் செய்துகொள்ளாத) ஏற்றுமதியாளர் : அது அப்போ.ஹூம்(பெருமூச்சு)