Tuesday, November 27, 2007

ஏற்றுமதி/இறக்குமதி - வங்கிகள் பங்கு என்ன?

சாதாரணமாக, நாம் ஏதாவது ஒரு பொருளை (துணிவகைகள், ப்ரிட்ஜ், டிவி, மிக்ஸி இது போல) வாங்க வேணுமானால், அதற்கான மதிப்பினை, பணமாகவோ, காசோலையாகவோ, கிரெடிட்கார்டு மூலமாகவோ அல்லது கடனிலோ ஈடு செய்கிறோம். இவற்றில் இரண்டாவதாகச் சொன்ன காசோலை கொடுத்து,(தற்போது இது அதிகம் பயன்படுவது இல்லை) பொருட்களை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். இந்த மாதிரியான வர்த்தகத்தில், கடைக்காரருக்கு காசோலை பணமாக அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் வரையில் உத்திரவாதமில்லை. இந்த காசோலை பணமில்லாத காரணத்தினால், திரும்ப நேரிட்டால், அதற்கு உரிய காப்பு நடவடிக்கைகளைச் சட்டப்படி எடுக்க இயலும். (Negotiable Instrument Act - என்ற ஓன்று காசோலைகளின் பரிவர்த்தனைகளைக் கட்டுப் படுத்துகின்றது).

இதே போன்று, வர்த்தக நிறுவனங்களிடையே செய்யப்படுகிற வியாபாரங்களுக்கு ஆதாரமாக இருப்பது டாகுமென்டுகளே. எப்படி காசோலைகளுக்கென்று ஒரு நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோ, அதே போன்று, இந்த மாதிரியான வர்த்தகப் பரிமாற்றங்களுக்காகவே,
“Uniform customs and Practice “ எனப்படும் நெறிமுறையினை வங்கிகள் பின்பற்றுகின்றன. இதில், ஏற்றுமதி/இறக்குமதி, எதுவாயினும், ஆதாரமான டாகுமென்டுகள் எப்படி இருக்க வேண்டும், அவை எப்படி நிறுவனங்களையும், சார்ந்துள்ள வங்கிகளையும் கட்டுப்படுத்துகின்றன போன்றவைகள் குறிப்பிடப் பட்டிருக்கும்.

இந்த டாகுமென்டுகள் பெரும்பாலும் சரக்குகளை வாங்கும் நிறுவனத்தின் பேரில்தான் வரையப்படும். எனவே, இதனை, சரக்குகள் ஏற்றுமதி செய்த பிறகு, நேரிடையாக அந்த நிறுவனத்துக்கே அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அயல் நாட்டில், இந்த நிறுவனமானது, டாக்குமென்டுகள் வந்து சேர்ந்ததுமே, சரக்குகளை வெகு சுலபமாக துறைமுகத்திலிருந்து தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு விடும்.அதன் பிறகு, அவர்கள் மனம் வைத்து சரக்குகளுக்கான மதிப்புத்தொகையை, ஏற்றுமதியாளர்களுக்கு அனுப்பினால்தான் உண்டு.
இது, எவ்வாறு நிச்சயம்? சரக்குகளைக் கைப்பற்றிய பிறகு, எந்த நிறுவனம் பணத்தை செட்டில் (settle) செய்ய முன் வரும்?
ஆகவே, ஏற்றுமதியோ அல்லது, இறக்குமதியோ எதுவாக இருந்தாலும், டாகுமென்டுகளை வங்கிகள் மூலம் அனுப்புவதே சிறந்த முறையாகும்.

வங்கிகள் மூலம் அனுப்புவதால் என்ன பயன்? வங்கிகள் இந்த டாகுமென்டுகளை எப்படி கையாளுகின்றன?

இந்தியாவிலிருந்த, ஒரு ஏற்றுமதி நிறுவனம் (A)என்று குறிப்பிடுவோம்.
அயல் நாட்டு நிறுவனத்தை (B) என்று கொள்வோம்.
A நிறுவனம், ஒப்பந்தத்தின் பேரில், சரக்குகளைத் தயார் செய்து, அவற்றை Bயின் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த உடன், அதற்கான டாக்குமென்டுகளை, தனது வங்கியிடம் ஒப்படைக்கிறது.
வங்கியில் இந்த டாக்குமென்டுகளை, தனது புத்தகத்தில் அதற்குரிய பிரிவிற்கேற்ப தொடர்ச்சி எண்களை பதிவு செய்கிறது. கூடவே சம்பந்தப்பட்ட எல்லா டாக்குமென்டுகளிலும் தனது வங்கி முத்திரையைப்பதித்து, அந்த எண்ணினை அவற்றில் குறிப்பிடுகின்றது. இவ்வாறு செய்வதால், டாக்குமென்டுகளில் அந்த வங்கியின் அதிகாரம் இல்லாமல் எவரும் எதுவும் செய்ய இயலாது. குறிப்பாக,சரக்குகளை ஏற்றுமதி செய்ததற்கான டாகுமென்டில் (Shipping bill – Bill of lading or Air way bill) வங்கியின் ஒப்புதல் இருந்தால்தான், B நிறுவனமானது சரக்குகளை, துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வர முடியும்.

ஆகவே, B நிறுவனமானது, சரக்குகளின் மதிப்பு மற்றும் வங்கிகள் குறிப்பிடும் இதர சிலவுகளுக்கான தொகையையும் சேர்த்து செலுத்திய பிறகே, டாகுமென்டுகளை சரியான வகையில் வங்கிகளின் ஒப்புதல் பெற்று, சரக்குகளைக் கைப்பற்ற முடியும். அவ்வாறு B நிறுவனம் செலுத்திய
பணமானது, வங்கிகளிடையே புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டு, வங்கிகள் மூலமாகவே, ஏற்றுமதி
செய்த A நிறுவனத்தின் கணக்கில் கொண்டுவரப் படுகிறது.

ஏற்றுமதி/இறக்குமதி, இவ்விரண்டிலுமே டாக்குமென்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உடலுக்கு உயிர் போல, டாக்குமென்டுகள் செயல்படுகிறது. டாக்குமென்டுகளில், ஏதாவது
தவறு இருந்தால், வங்கிகளும், தொடர்புடைய நிறுவனங்களும், சரக்குகளுக்கான மதிப்புத்
தொகையை தருவதில் சிக்கல்கள் ஏற்படும். அதனால்தான், வங்கிகள் தமது வாடிக்கையாளரின் நலனை மனதில் கொண்டு, தம்மிடம் ஓப்படைக்கப்படுகின்ற டாகுமென்டுகளை, மிக கவனத்துடன் பரிசீலனை செய்து அவற்றில் தவறுகளோ அல்லது மேலும் ஏதாவது டாகுமென்டுகள் தேவையானாலோ, தகுந்த ஆலோசனைகளைக் கூறி, ஆரம்பக் கட்டத்திலேயே நிவர்த்தி செய்கின்றனர்.

4 comments:

eeasy baby said...

தொடர்ந்து எழுதுங்கள்..
it is nice to understand better.

Srinivasan said...

Very Nice Informations, thank you...

எனது பக்கங்கள்... said...

பயனுள்ள தகவல்,மிக்க நன்றி.

காவிரி நாடன் said...

பயனுள்ள பதிவு....நன்றி சகோ.